

சிதம்பரம்,
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). பெயிண்டரான இவருக்கும், சிவகாமி (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் தற்போது 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன், மனைவி இடையே கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த அக்.30-ந்தேதி மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அக்கம் பக்கத்தினருக்கோ, கிராம மக்களுக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்காமல், இரவு வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் உடலைச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் பெண்ணின் உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவதாக கிராம உதவியாளர், வட்டாட்சியரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, வட்டாட்சியர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் டி.ஜெ. சத்திரிய கவின், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட போலீசார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அதே பகுதியில் விறகுக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரனின் தந்தையும் சிவகாமியின் உடலை எரிக்க உதவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி உயிரிழந்தது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், அவரது உடலை அவசர அவசரமாக எரித்ததன் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.