சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை: வங்கி அதிகாரியிடம் விசாரணை

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடக்கிறது. வங்கி அதிகாரியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை: வங்கி அதிகாரியிடம் விசாரணை
Published on

சென்னை,

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்ததில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத ரூ.77 கோடி பணம் சிக்கியது. மேலும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்தநிலையில் சென்னை தியாகராயநகர் ஜி.என்.டி. சாலையில் உள்ள ராகவையா தெருவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது. 14 பேர் கொண்ட அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். அன்புச்செழியனை வைத்துக்கொண்டு அதிகாரிகள் ஒவ்வொரு ஆவணங்களையும் அலசி ஆராய்ந்தனர்.

மதியம் 1 மணியளவில் அன்புசெழியன் அலுவலகத்தில் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை புலன் விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர். அன்புசெழியன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

அவருடைய வீட்டில் பழுதான ஏ.சி.யை பழுதுபார்க்க மெக்கானிக்குகள் வந்தனர். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். அன்புசெழியன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவருடைய பணியாளர்கள் வெளியே சென்றபோது, போலீசார் அவர்களை அழைத்து சென்று வந்தனர்.

அன்புசெழியன் வீட்டில் கிடைத்த ஒரு ஆவணத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் உயர் அதிகாரி ஒருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர். அன்புசெழியன் வீட்டுக்கு வரவழைத்து, அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடந்தது.

சென்னை தியாகராயநகர் திருமலை சாலையில் உள்ள கல்பாத்தி அகோரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவருடைய வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், பிகில் பட குழுவில் இடம் பெற்ற முக்கிய நபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com