

நெல்லை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே முன்னுதாரணமாகச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட தனது தந்தையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
தற்போது, அந்த உத்தரவை அப்படியே செயல்படுத்திக் காட்டும் வகையில், அமைச்சர் மதன் ராஜா தனது தந்தைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல், நெல்லை அரசு மருத்துவமனையிலேயே அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். தற்போது அமைச்சரின் தந்தைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.