தி.மு.க. தலைவரை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்... முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை - மாணிக்கம் தாகூர் பதிவு

ஜனநாயகப் பண்பாடு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தமிழகம் இந்தியாவிற்கு தொடர்ந்து காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்... முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை - மாணிக்கம் தாகூர் பதிவு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து சென்ற மு.க.ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் கலந்து பேசினர். இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தது முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மிகவும் கண்ணியமான மற்றும் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை. இதுதான் போட்டிக்கு அப்பாற்பட்ட மரியாதையையும், அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மாண்பையும் பிரதிபலிக்கக் கூடிய, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல்.

தலைவர்கள் வெறுப்புக்கு மேல் நாகரிகத்தையும், பிளவுக்கு மேல் உரையாடலையும் தேர்ந்தெடுக்கும்போது ஒரு மாற்றத்தின் சகாப்தம் தொடங்குகிறது. ஜனநாயகப் பண்பாடு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தமிழகம் இந்தியாவிற்கு தொடர்ந்து காட்டி வருகிறது.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com