நடிகை குஷ்புவின் அழகு ரகசியம் என்ன? - காங்கிரஸ் மகளிர் தின நிகழ்ச்சியில் ருசிகரம்

தனது அழகு ரகசியம் குறித்து காங்கிரஸ் மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு ருசிகரமாக கூறினார்.
நடிகை குஷ்புவின் அழகு ரகசியம் என்ன? - காங்கிரஸ் மகளிர் தின நிகழ்ச்சியில் ருசிகரம்
Published on

சென்னை,

அகில இந்திய சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நிர்வாகிகள் யசோதா, சாய்லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார். மகளிரணி தலைவி ஜான்சிராணி, சுசீலா, தேசிய செயலாளர் சுதா, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, எம்.பி. ரஞ்சன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இதற்கு நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ், ரெயில் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

குஷ்பு பேசுகையில், நரேந்திர மோடி தனது சுயவிளம்பரத்துக்காக ரூ.4,800 கோடி செலவு செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட, அது காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி தான்.

என்னுடைய அழகு ரகசியம் என்ன? என்று பலர் கேட்கிறார்கள். நான் தினமும் காலையில் எழுந்தவுடன், கண்ணாடியை பார்த்து, நீ அழகு டா செல்லம் என்று என்னை நானே வர்ணித்து கொள்வேன். இது தான் என் அழகு ரகசியம். இதேபோன்று எல்லா பெண்களும் தங்களை ரசிக்க வேண்டும் என்றார்.

விழாவில், காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசு, அகமது அலி, மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com