புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள்... முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
குடியிருப்புகள்
Published on: 

சென்னை,

சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களில் ரூ.1,021.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில் 17 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், சென்னை மாவட்டம், அரும்பாக்கத்தில் 588 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உயர் வருவாய்ப் பிரிவினருக்கான இரண்டு அடித்தளங்கள் மற்றும் தூண்தளத்துடன் கூடிய 19 தளங்களைக் கொண்ட 304 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் இரண்டு அடித்தளங்கள் மற்றும் தரைத்தளத்துடன் கூடிய 11 தளங்களைக் கொண்ட 1 வணிக வளாகம்;

அசோக் நகரில் 307 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரைத்தளம் மற்றும் 22 தளங்களுடன் கூடிய 1 வணிக வளாகம் மற்றும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கான 216 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள்

பெசன்ட் நகரில் 23 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய 1 வணிக வளாகம் மற்றும் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 8 தளங்களுடன் கூடிய 8 உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள் மற்றும் 8 மத்திய வருவாய் பிரிவு குடியிருப்புகள்;

பாடிக்குப்பத்தில் 80 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தூண்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய உயர் வருவாய் பிரிவினருக்கான 80 அடுக்குமாடி குடியிருப்புகள்;

கருமாங்குளத்தில் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 24 அடுக்குமாடிக் குடியிருப்புகள்;

என மொத்தம் 5 இடங்களில் 1,003 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இவ்வளாகங்களில் குடியிருப்பு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் நிறுத்துவதற்காக அடித்தளம், மின்தூக்கி, தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள், கண்காணிப்புக் கேமராக்கள், சூரிய மின்சக்தித் தகடுகள் மற்றும் மின்ஆக்கி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் விநியோகம், கழிவுநீர் வெளியேற்றம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின்சார வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறந்து வைத்தல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ், 17 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டப் பகுதியில், குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், மின் தூக்கிகள், மின் ஆக்கி, தார்ச் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வே.சிவா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் மரு.சு.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X