போர் பதற்றம்: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிப்பு

கடந்த 3 நாட்களாக முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது.
போர் பதற்றம்: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சுமார் 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கான விலையை தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்கிறது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்து உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரம்ஜான் நோன்பு, கிறிஸ்தவர்களின் தவக்காலம் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு சரியும். அதன்படி தற்போது 20 சதவீதம் வரை பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு சரிந்து உள்ளது. அதனால் விற்பனையை அதிகரிக்க கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி துபாய், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 3 நாட்களாக முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார் 2 கோடியே 40 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டு இருப்பதால் அவற்றில் உள்ளூரில் விற்பனையானது போக மீதமுள்ள முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் பணியில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பண்ணையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com