

சென்னை,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேட்பாளர் தேர்வில் அக்கட்சியில் எழுந்த குளறுபடி காரணமாக பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நேற்று ராகுல், கார்கே உள்ளிட்டோர் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை,காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் காங்கிரஸ் சீட்டு வழங்கி உள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாமக கவுரவ தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
காங்கிரசில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களான பிரின்ஸ்(குளச்சல்), கணேஷ்(ஊட்டி), ராஜ்குமார்( மயிலாடுதுறை) பழனி நாடார்( தென்காசி), ராதாகிருஷ்ணன்( விருத்தாசலம்) ஆகியோருக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.
* விஜயதாரணி ராஜினாமா செய்ததால் காலியான விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கித்போர்டு, இப்போது குளச்சல் தொகுதியில் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் பிரவீன் என்பவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில், மத்த பிரச்சினைகளை அடுத்த மாதம் வரை தள்ளி வைப்போம் என காங். எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது. இந்நேரத்தில் நாம், நம் உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் அண்ணன் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளர்.