

சென்னை,
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க சட்டசபையில் இன்று தமிழக அரசின் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டிருந்தது. இதற்காக அந்த மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது
இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தித்துறை மந்திரி சி.ஆர்.பாட்டிலிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது. அந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரிப்பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். எனவே கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இல்லாமலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் முன்மொழிந்ததும், அதன் மீது கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். பின்னர் அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.