

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயண திட்டம் என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். த.வெ.க. தலைமையில் ஆட்சி அமைந்தபின், மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றி பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட் டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயலாகும். வெற்றி பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பஸ்களுக்கு இந்த திட்டத்தை விரி வுபடுத்த வேண்டும். இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
சட்டசபையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப் படும் இந்த திட்டம் தொடர்பாக அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்பட வில்லை. எனவே, இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சட்டசபையில் விதி எண் 110 கீழ் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, 2 வழித்தடங்களில் மட்டும் பேருந்தை இயக்கும் உரிமையாளர் எப்படி வழக்கு தொடர முடியும்? தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டத்தை எதிர்த்த வழக்கை பொது நல வழக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக ஈரோட்டை சேர்ந்த பஸ் உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.