தலையங்கம்

மக்கள் பணம் பாதுகாப்பாக இருந்தால் தவறில்லை


மக்கள் பணம் பாதுகாப்பாக இருந்தால் தவறில்லை
21 Nov 2025 5:37 AM IST

எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது.

சென்னை,

அமெரிக்காவில் 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் பழமையான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, கடந்த மாதம் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிதி முதலீடு குறித்து வெளியிட்ட செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதானி நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு லஞ்சம் மற்றும் மோசடி புகார்களை அமெரிக்க அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகள் அந்த குழுமத்துக்கு கடன் தர மறுத்துவிட்டன. இந்த சூழலில், எல்.ஐ.சி. நிறுவனம் அதானி குழுமத்துக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், அதற்கான ரகசிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. இந்திய பொருளாதார வரலாற்றில் இது முக்கியமான முடிவாகும். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் பலன் கிடைக்கும் என்ற பிரசாரத்தை முன்வைத்ததால் ஏராளமான மக்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் சேமிப்புகளை அதில் முதலீடு செய்தனர். இதனால் எல்.ஐ.சி. நிறுவனம் இன்று ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி வளர்ந்துள்ளது. இப்போது இந்த நிறுவனத்தின் சொத்துகள் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி கணக்குப்படி ரூ.57 லட்சத்து 5 ஆயிரத்து 342 கோடியாகும். இந்த நிறுவனத்தில் இருக்கும் பாலிசிதாரர்களின் எண்ணிக்கை 35.33 கோடியாகும்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், “அதானி நிறுவனத்துக்கு எல்.ஐ.சி.யில் உள்ள மக்களின் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் கோடி அதானி நிறுவன பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசாங்க அதிகாரிகள், எல்.ஐ.சி. மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் திட்டம் தீட்டி அதற்காக ஒரு வரைவு அறிக்கை தயார் செய்தது மட்டுமல்லாமல், அதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும்” கூறியிருந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் மத்திய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றன. அதானி நிறுவனம் லாபம் அடைவதற்காக வெளியே இருந்து ஒரு சக்தி அழுத்தம் கொடுக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் கூற்றாகும்.

ஆனால் “இது முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு. எங்களது முதலீட்டு முடிவுகள் சுயமாகவும், கொள்கைகளின்படி நிர்வாக குழு ஒப்புதலின்அடிப்படையில்தான் எடுக்கப்படும். இதில் நிதி துறைக்கோ, வேறு எந்த அமைப்புக்கோ பங்கு கிடையாது” என்று எல்.ஐ.சி. திட்டவட்டமாக மறுத்துள்ளது. எல்.ஐ.சி. தன்னிடம் உள்ள நிதியை பல நிறுவனங்களில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்குகிறது. உதாரணமாக, டாடா நிறுவனத்தின் பங்குகளில் ரூ.1.30 லட்சம் கோடியும், ஆதித்யா பிர்லா குழுமத்தில் ரூ.43,600 கோடியும் முதலீடு செய்துள்ளது. அதானி நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இன்றைய மதிப்புப்படி ரூ.60 ஆயிரம் கோடியிலான பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. இந்த பணம் பாதுகாப்பாக இருந்தால் தவறில்லை. ஆனால் அதானி நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், எல்.ஐ.சி. அதன் கைவசம் வைத்திருக்கும் அதானி பங்குகளின் விலை சரியும். அந்த நேரத்தில் எல்.ஐ.சி.யில் பாலிசி எடுத்து இருக்கும் மக்களுக்கு நஷ்டம் ஏற்படும். மக்களின் பணத்துக்கு எல்.ஐ.சி.தான் பொறுப்பு. ஆக எல்.ஐ.சி. தன் முதலீடுகளை மிக கவனத்தோடு கையாளவேண்டும்.