இனி பணப்புழக்கம் அதிகரிக்கும்


இனி பணப்புழக்கம் அதிகரிக்கும்
x

22-ந்தேதி முதல் பெரும்பான்மையான பொருட்கள் மீதான விலை குறையும்.

சென்னை

ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவை வரி ‘குட் அண்டு சிம்பிள்’ வரி என்று ஆளுங்கட்சியாலும், ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்று எதிர்க்கட்சிகளாலும் வர்ணிக்கப்பட்டது. 2017-ல் இந்த வரி அமலுக்கு வந்த நேரத்தில் நாடு முழுவதும் 65 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. வரி கணக்கை தாக்கல் செய்தனர். இதன்மூலம் ரூ.7.19 லட்சம் கோடி வரி வசூலானது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு கோடியே 51 லட்சம் பேர் கணக்கை தாக்கல் செய்த நிலையில் ரூ.22 லட்சம் கோடி வரி வசூலாகியது. மாதம் சராசரியாக ரூ.1.9 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வசூலாகிறது. இந்த தொகையை மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் பாதியாக பிரித்துக்கொள்கின்றன.

ஜி.எஸ்.டி.யை குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை அடிப்படையில் மத்திய நிதி மந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி மாற்றங்களை செய்துவந்தது. கடைசியாக நடந்த 16-வது கவுன்சில் கூட்டத்தில் மிகவும் புரட்சிகரமான மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 5, 12, 18, 28 சதவீதங்களில் இருந்த வரி விகிதங்களில் 12 மற்றும் 28 சதவீதங்கள் நீக்கப்பட்டு, இனி 5, 18 சதவீதங்கள் மட்டுமே அமலில் இருக்கும். புகையிலை பொருட்கள் மற்றும் மிக அதிக விலையுள்ள ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை 12 சதவீத வரிக்கு உட்பட்ட பொருட்களில் 99 சதவீத பொருட்களுக்கு இனி 5 சதவீதமும், 28 சதவீத வரி வரம்பில் இருந்த 90 சதவீத பொருட்களுக்கு 18 சதவீதமும் தான் வசூலிக்கப்படும். ஜி.எஸ்.டி. மாற்றத்தால் வரும் வரி குறைப்பு அந்த பொருளை வாங்கும் பொதுமக்களை அடையவேண்டும் என்று உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 546 பொருட்களில் 350-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை இனி குறையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பல பொருட்களின் விலை குறையும் என்பதால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். சில அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை இப்போது ரூ.10 ஆக இருந்தால் இனி ரூ.9 ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் சிறிய பொருளுக்குக்கூட ஒரு ரூபாய் குறையும்.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாளர்கள் இப்போதே விலை குறைப்பை அறிவித்துவிட்டார்கள். விலை குறையும் என்பதால் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு, குடும்ப பெண்கள் இப்போதே அதனை முன்பதிவு செய்து இருக்கிறார்கள். எவ்வளவு விலை குறையும்? என்பதை அந்த பொருட்கள் மீது புதிய விலையின் ஸ்டிக்கரை ஒட்டவேண்டும். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 22-ந்தேதி முதல் பெரும்பான்மையான பொருட்கள் மீதான விலை குறையும் என்பதால், அந்த பலனால் கிடைக்கும் பணம் மக்களிடம் கையிருப்பில் இருக்கும். இதைக்கொண்டு இதுவரை அவர்களால் வாங்கமுடியாத பல பொருட்களை வாங்குவார்கள் அல்லது சேமிப்பார்கள். ஆக மொத்தத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் வியாபாரமும், அதனால் உற்பத்தியும் அதிகரிக்கும். இப்போது இந்த வரிகுறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டாலும், ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் என்பதால் வரி வசூல் அதிகரித்து இழப்பு குறையும்.

1 More update

Next Story