பட்ஜெட் தயாரிக்க நிதி மந்திரிகளுடன் ஆலோசனை


பட்ஜெட் தயாரிக்க நிதி மந்திரிகளுடன் ஆலோசனை
x

நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கப்போகிறார்.

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் ஆர்.கே.சண்முகம்செட்டி என்ற தமிழர்தான். அவரைத்தொடர்ந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் என்று தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக நிதி மந்திரி என்ற முறையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கப்போகிறார். ப.சிதம்பரமும் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் என்றாலும், அவர் நிர்மலா சீதாராமனைப்போல தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 9-வது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்ததில்லை. 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தாக்கல் செய்யும் மரபு தொடங்கியது. அதன்படி, இந்த ஆண்டு 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது என்றாலும், மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது.

இதற்காக நிர்மலா சீதாராமன் கடந்த 10-ந்தேதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளுடன் டெல்லியில் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டுக்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், வேண்டுகோள்களை வழங்கியது பாராட்டுக்குரியது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவுடன் நடைபெறுகிறது.

குறிப்பாக ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28 சதவீதம் பங்களித்து வருவதால் 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் நிலையில், அமெரிக்க வரிவிதிப்பால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அச்சுறுத்தல் உள்ளதால் வரி சலுகை போன்ற அம்சங்கள் அடங்கிய பிரத்யேக ஆதரவு தொகுப்பை மத்திய அரசாங்கம் அறிவிக்க வேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. சீரமைப்பால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே மாநில அரசுகளின் இழப்பீடுகளை குறைக்கும் வகையில் இழப்பீட்டு முறையை மத்திய அரசாங்கம் அறிவிக்கவேண்டும். அதோடு மாநிலங்கள் உரிய பங்கினை பெற மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதங்களோடு இணைக்கவேண்டும்.

125 நாள் வேலை என்ற மத்திய அரசின் புதிய ஊரக வேலை சட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படுகிறது. எனவே இந்த செலவு பங்கீட்டு விகிதத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஜல்ஜீவன் திட்டத்துக்கு ரூ.3,122 கோடி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கு ரூ.3,548 கோடி உள்பட பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் பங்களிப்பை 30 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தவேண்டும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,500 கோடி நிதி, மதுரை-கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி மற்றும் தமிழகத்தின் ரெயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும் என்றும் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார். இதையெல்லாம் நிறைவேற்றும் வகையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

1 More update

Next Story