எட்டு தடவைக்கு மேல் எத்தனை தடவை பேசுவது?


எட்டு தடவைக்கு மேல் எத்தனை தடவை பேசுவது?
x

தன்னிச்சையாக செயல்படாமல் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நட்பை புதுப்பிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நட்பு மிளிரும் சரித்திரம் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்தே இந்த உறவில் சற்று விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்தியாவுக்கு பாதகமாக பல நடவடிக்கைகளை அவர் எடுக்க தொடங்கினார். முதலில் அவர் இந்தியாவுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த நிதி மூலம்தான் ரஷியா உக்ரைனில் ரத்தக் களறியை நடத்திக்கொண்டு இருக்கிறது என்று கூறி, இந்தியாவுக்கு அபராத வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இதனால் இந்தியாவின் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. உற்பத்தி மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டுக்கு குறிப்பாக திருப்பூருக்கு பெரிய பாதிப்பை கொடுத்தது.

ஏனெனில் இந்த வரி விதிப்புடன் தமிழ்நாட்டு ஆடைகள் அமெரிக்காவுக்கு செல்லும்போது அதன் விலை அதிகமாக இருக்கிறது. அதேநேரத்தில் வங்காளதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் அந்த நாட்டு ஆடைகளுக்கு விலை குறைவாக இருக்கிறது. இதனால் அதையே அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள். இந்த நிலையில் பட்ட காலிலேயே படும் என்பது போல இன்னும் ரஷியாவிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது என்ற உப்புக்கு சப்பு இல்லாத காரணத்தைக் கூறி 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவை டிரம்ப் நிறைவேற்றினார். இந்தியாவோடு சேர்த்து சீனாவுக்கும், பிரேசிலுக்கும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரே வழி இருநாடுகளுக்கு இடையே நிறைவேற்றப்படும் வர்த்தக ஒப்பந்தம்தான். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கி பல முறை நடந்து முடிந்துவிட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக நல்ல முடிவை எட்டப்போகும் நேரத்தில் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு தள்ளிப் போடப்பட்டுக்கொண்டே வருகிறது. இப்போது அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்டு லுட்னிக் ஒரு புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவும் அமெரிக்காவும் நிறைவேற்றுவதற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்துக்கு வந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் ஜனாதிபதி டிரம்பிடம் பேசவில்லை. அதனால்தான் இது நிறைவேற்றப்படவில்லை” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல ஒரு கதையை சொல்லிவிட்டார்.

ஆனால் இந்திய வெளியுறவுத்துறை இதை முற்றிலும் மறுத்து இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் 8 முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளது. 8 முறைகளுக்கு மேல் எத்தனை முறை ஒரு பிரதமர் மற்றொரு நாட்டு ஜனாதிபதியிடம் பேசமுடியும்? எனவே சாவியை தொலைத்துவிட்டு பூட்டை உடைக்கும் கதையாக தன்னிச்சையாக செயல்படாமல் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நட்பை புதுப்பிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை இந்தியாவும் செய்ய வேண்டும்.

1 More update

Next Story