

சண்டிகார்,
சீக்கிய மத அமைப்பான தேரா சச்காண்ட் பல்லான் அமைப்பின் தலைவர் சாந்த் நிரஞ்சனுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜலந்தரில் உள்ள தேரா சச்காண்ட் பல்லான் தலைமையகத்துக்கு செல்கிறார்.
இந்நிலையில், நேற்று அந்த அமைப்புக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், ஜலந்தர் நகரில் 5 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பிரதமர் மோடியை காலிஸ்தானிகளின் எதிரி என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரதமரின் வருகைக்கு முந்தைய நாள் மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜலந்தரில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அந்த பள்ளிகளிலும், தேரா சச்காண்ட் பல்லான் தலைமையகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் அதில் சந்தேகத்துக்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.