

சென்னை,
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் பிப்.12 வரை விருப்பமனு பெறலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
விரைவில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை பிப். 6 முதல் பிப். 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப். 12 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.