திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்பதைக் கண்டறிந்ததாக அந்த சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு
Published on

அமராவதி,

ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்திற்கு விநியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்பதைக் கண்டறிந்ததாக அந்த சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது

இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்ளிட்ட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள்

சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கின் ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com