

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குகின்றன. இதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில், புது வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் மல்லுக்கு நிற்கிறது.
2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த 2 மாதங்களில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போதே, 2026 சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்று அறிவித்துவிட்டார். அதன்பிறகு, விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் பேசும்போது, "சட்டசபை தேர்தலில் நம்முடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குதரப்படும் " என்று அறிவித்தார்.
தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதுவரை 16 முறை சட்டசபை தேர்தல் நடந்தாலும், ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள், தங்களுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தந்ததே இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு தமிழக அரசியலில் விசித்திரமாக பார்க்கப்பட்டது. ஆனால், என்னவோ தெரியவில்லை, அதிரடி ஆபர் கொடுத்தும் த.வெ.க. கூட்டணியில் இணைய யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், த.வெ.க. கூறிய "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்ற கோஷத்தை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் முன்வைக்க தொடங்கியது.
"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கை கொண்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணி சேர முடிவு செய்து, அக்கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, விஜய்யுடன் போனிலும், மூத்த நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவிகள், 2029 நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள் என அடுக்கடுக்கான வாக்குறுதிகள் த.வெ.க. தரப்பில் இருந்து அளிக்கப்பட்டதாம்.
இதனால், அகம் மகிழ்ந்த காங்கிரஸ் கட்சியும், தி.மு.க. முரண்டு பிடித்தால், த.வெ.க. பக்கம் சாய்ந்துவிடலாம் என்று காய்களை நகர்த்த தொடங்கியதாம். 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடஒதுக்கீடு என்று மீண்டும் தி.மு.க.விடம் வலியுறுத்தத் தொடங்கியது.
ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை குழுவைகூட தி.மு.க. தலைமை அமைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பமாக இருந்தாலும், தேசிய தலைவர்களான சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் "இந்தியா" கூட்டணியை மனதில் வைத்து, தி.மு.க.வுடன் தொடர்ந்து கைகோர்த்து செயல்படுவதையே விரும்புகிறார்களாம்.
இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதை அறிந்துகொண்ட மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க., ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்ததாம். இந்த நேரத்தில்தான் "ஜனநாயகன்" படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் வெளிவராமல் போனது. படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும், தீர்ப்புகள் எதிராக அமைந்ததால், ஒரு மாதம் ஆகப்போகும் நிலையிலும் படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில்தான், விஜய்யின் அரசியல் ஆலோசகரான விஷ்ணு ரெட்டி, டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினாராம். அப்போது, "பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வரவேண்டும். இல்லை என்றால், தனித்து தேர்தலை சந்தியுங்கள். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடாது" என்று உத்தரவு போடப்பட்டதாம். மேலும், பா.ஜ.க. மீதான விமர்சனங்களையும் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதாம். தாங்கள் கூறியபடி நடந்துகொண்டால், "ஜனநாயகன்" படம் வெளிவர உதவி செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாம்.
அதன் தொடர்ச்சியாகத்தான், சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் நடந்த த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், மத்திய அரசு மீதான விமர்சனத்தை குறைத்துக்கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. மீதான விமர்சனத்தை அதிகரித்துக் கொண்டாராம். இப்போது, காங்கிரசை தவிர வேறு எந்தக் கட்சியாவது கூட்டணிக்கு வருமா? என்று த.வெ.க. பார்த்துக் கொண்டு இருக்கிறதாம்.
யாரும் கூட்டணிக்கு வராத பட்சத்தில் தேர்தலை தனித்தே எதிர்கொள்வது என்று த.வெ.க. முடிவு செய்துள்ளதாம். தமிழகத்தில் வெளியான ஒரு சில கருத்து கணிப்புகள் படி, த.வெ.க.வுக்கு 18 சதவீதம் அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால்,த.வெ.க. தனியாக எடுத்த சர்வேயில் 30 சதவீதம் அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். அதனால், விஜய்காந்த் போல் விஜய்யும் முதல் தேர்தலை தனித்தே சந்திப்பார் என தெரிகிறது.