

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவையும், ஆட்சி பொறுப்பையும் கையில் எடுக்க முனைப்பு காட்டிய விகே சசிகலாவுக்கு பேரதிர்ச்சியாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு கிடைத்தது.
சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா அதிமுக-வை மீண்டும் ஒருங்கிணைக்கப் போவதாக அறிவித்தார். அதே கருத்தை கூறி அமமுக கட்சியை தொடங்கியது முதலே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், திடீரென அதே அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி தினகரன் திடீரென விறுவிறுவென புறப்பட்டு சென்றார். அதேபோல் அண்ணா நினைவு நாளில் சென்னை மெரினா கடற்கரையில் சசிகலாவின் காரும், டிடிவி தினகரனின் வாகனமும் அருகருகே நின்ற போது, அவசர அவசரமாக அங்கிருந்து டிடிவி தினகரன் புறப்பட்டுச் சென்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருவது, டிடிவி தினகரனுடனான பிணக்கு என அதிருப்தியில் உள்ள சசிகலா, அதிமுக மற்றும் அமமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை தன் பக்கம் இழுத்து, வரும் தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் கலந்து கொண்டார்.
மதுரையில் அமமுகவின் முகமாக அறியப்படும் ஜீவிதா நாச்சியார், சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது டிடிவி தினகரனையும், அமமுகவினரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் விதமாக ஜீவிதா நாச்சியாரை கட்சியில் இருந்தும் நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்தார்.
அமமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக்கூறி மாணவியர் அணி
செயலாளர் ஜீவிதா நாச்சியார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் "துரோகம் வேர் அறுக்கப்படும்" என ஜீவிதா நாச்சியார் பதிவிட்டுள்ளார்.