

திருவனந்தபுரம்,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் "கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கையே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் காட்டுகிறது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மாநில அரசு நெடுங்காலமாக முன்வைத்துவரும், எய்ம்ஸ் மருத்துவமனை, அதிவேக ரெயில் வழித்தடங்கள், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கான சிறப்பு நிதித் தொகுப்பு உள்பட முக்கிய கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கேரளத்துக்கான நிதி ஆணையத்தின் நிதி விடுவிப்பை அதிகரிக்கச் செய்யாததும், தொடர்ந்து அதே 41 சதவீத நிதிப்பங்களிப்பே தொடருமென்பதும் ஒன்றிய கொள்கைகளை கேள்விக்குறியாக்குகின்றன. பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தை, இங்கிருந்து மத்திய அமைச்சர்களாகியிருப்பவர்கள் தர வேண்டும்.
பெரும் முதலாளிகளுக்கு ஊக்குவிப்பளிக்கும் பொருளாதார கோட்பாட்டுடன் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த வறுமைக்குள் தள்ளும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.