வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மிக தீவிர புயலாக ஆந்திர கடலோர பகுதிகளை அடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Published on: 

சென்னை,

மிக தீவிர புயலாக வலுப்பெறவுள்ள இந்த புயலுக்கு அர்னாப் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது.

அர்னாப் புயல்

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன் தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக இன்று (திங்கட்கிழமை) உருவாகிறது. மிக தீவிர புயலாக வலுப்பெறவுள்ள இந்த புயலுக்கு அர்னாப் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது.

ஆந்திர கடலோர பகுதி

இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோர பகுதிகளை அடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை

இதற்கிடையே, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com