

சென்னை,
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) இன்று வலுப்பெறும். அதன் பிறகு, அடுத்த 2 நாட்களில் இது மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 2-ம்தேதி, நீலகிரி மாவட்டத்தில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, அக்டோபர் 1 முதல் 30-ம்தேதி வரை, 21 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 32 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நவம்பர் 8-ம்தேதி, தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது; கனமழைக்கு வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.