

சென்னை,
கோடை காலம் இம்மாதம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது. கோடை காலத்தின் தொடக்கத்திலேயே இப்படி வாட்டி வதைக்கிறதே? என்று பேசும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் வளிமண்டலத்தில் கிழக்கு, மேற்கு என இருதிசை காற்று சந்திப்பு நிகழ்வு ஏற்பட இருக்கிறது என்றும், இதன் காரணமாக வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி (சனிக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும், 18, 19-ந்தேதிகளில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும், 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான காலகட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என சொல்லப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையில், 20-ந்தேதி இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோடை கால மழை என்பதால், பகலில் வெயிலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழையும், அவ்வப்போது வலுவான இடி, மின்னலுடன் மழையுமாக இருக்கும்.