

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' புயல் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ஒடிசாவில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையே நாளை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவின் தெற்கு, வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை சுமார் 46 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.. மேலும், 448 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 3,000 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப்பகுதிகளில் வசிப்பவர்களும் நிலச்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஞ்சம், மல்கான்கிரி, ராயகடா, கோராபுட், கலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் 60 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், புயல் அச்சுறுத்தல் காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில தேர்வு வாரியத்தின் ஆட்சேர்ப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயலால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.