

சென்னை,
வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அக்வான் புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
முதலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் - யானம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் நகர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அக்வான் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - ஒடிசா மாநிலம் பூரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 20-ஆம் தேதி நண்பகல் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.18) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல் தமிழ்நாட்டை விட்டு விலகிச் சென்றாலும், அதன் தாக்கம் காரணமாக இன்று வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து 570 கி.மீ. கிழக்கே மையம் கொண்டுள்ளது.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.