இன்று உருவாகிறது “சென்யார் புயல்” - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று உருவாகிறது “சென்யார் புயல்” - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்திற்குள் (சென்யார்) புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வங்கக்கடலில் இலங்கையையொட்டி நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடையும் என்றும், ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வுப் பகுதியாக இன்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளையும் வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், நேற்று முன் தினம் (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (25-11-2025) காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

நேற்று முன் தினம் (24-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (25-11-2025) காலை 5.30 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-11-2025), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக இன்று 26-11-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (27-11-2025): தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com