சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்

புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்
Published on

டிட்வா புயல்

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு 1 மணி நிலவரப்படி வேதாரண்யத்துக்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு, தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 280 கி.மீ. தொலைவிலும் இருந்தது.

புயல் நகரும்போது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இன்று காலையிலும், 25 கி.மீ. தொலைவில் மாலையிலும் நிலவக்கூடும். சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகே இன்று மாலை வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை

அந்த வகையில் டிட்வா புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைக்கு அருகே வந்து நின்று வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழையை கொட்ட தயாராகி வருகிறது. நேற்று இரவில் இருந்தே மழை தொடங்கிவிட்ட நிலையில், இன்றும் மழை வெளுத்து வாங்கும் என சொல்லப்படுகிறது.

அதன்படி, வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (அதாவது சிவப்பு எச்சரிக்கை), சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

காற்று எப்படி இருக்கும்?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடி, கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

புயல் காரணமாக தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும், சென்னை உள்பட ஏனைய வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாநில அரசு தயாராகி வருகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வட கடலோர மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com