எல் நினோ தாக்கம்: தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

எல் நினோவின் தாக்கத்தாலும், மாறிவரும் பருவநிலை காரணத்தாலும் தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்துள்ளது.
எல் நினோ தாக்கம்: தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ தாக்கம் குறித்து சென்னை பள்ளிக்கரணையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை

எல் நினோ வலுவாக இருக்கும் காலத்தில் வெப்ப மண்டல புயல்களின் தீவிரம் குறைவாக இருக்கும். எல் நினோ தாக்கம் ஏற்படும் போதிலும், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். தென்கிழக்கு வங்கக்கடலில் புயல்கள் உருவாகி, வடமேற்கு நோக்கி நகர்ந்தாலும், அவற்றின் தீவிரமும் புயல் பாதையின் நீளமும் குறைவாகவே இருக்கும்.

புயல் அமைப்புகள் இல்லாதபோது தமிழகத்தில் மழை குறையலாம். வரும் 15-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும். தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியான மழைப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் தெற்கு மற்றும் கடலோர பகுதிகள் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழையை பெற வாய்ப்புள்ளது. அதேநேரம், வட உள்மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக் கூடும்.

எல் நினோ தாக்கத்தால் தமிழகத்தில் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். அதேசமயம் தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்திலும் இயல்பை விட அதிகமான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை சந்திக்க நேரிடலாம்.

2001-ம் ஆண்டுக்கு பிறகு குறைவு

நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவான அளவே பொழிந்துள்ளது. மழைப் பற்றாக்குறையுடன் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில், 2001-ம் ஆண்டுக்கு பிறகு பதிவான 4-வது குறைந்த மழை இது ஆகும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக நீண்ட கால இடைவெளியில் இந்தியாவில் 87.4 சதவீதம் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. இது இயல்பான மழை அளவு.

மாறிவரும் பருவநிலை

ஆனால் தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான நிலவரப்படி, 25.8 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இது இயல்பைவிட 20 சதவீதம் குறைவு. தஞ்சாவூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமான பற்றாக்குறை பதிவானது. தஞ்சாவூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமான பற்றாக்குறை பதிவானது. எல் நினோவின் தாக்கத்தாலும், மாறிவரும் பருவநிலை காரணத்தாலும் தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com