

ஈரோடு,
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்த நிலையில், பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் முதல் முறையாக ஈரோட்டில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இன்றைய தினம் ஈரோட்டில் 100.04 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதற்கு அடுத்ததாக கரூர் பரமத்தியில் 99.5 டிகிரி, மதுரை விமான நிலைய பகுதியில் 99.32 டிகிரி, சேலத்தில் 98.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.