

சென்னை,
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. சென்னையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. கடல் காற்றும் இதமான வெப்பநிலையும் இருந்தது. இந்த நிலையில், வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது;- தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். நாளை மறுநாள்( 27-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்க கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.