

கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இது தொடர்பாக கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி, குமரிக்கடல் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா், கரூா், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருது நகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளைவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.