கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்"


கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
x

பெங்களூருவில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் தொடங்கியது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. குளுகுளு நகரமான பெங்களூருவில் வெப்பநிலை 100 டிகிரியை நெருங்கியது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த 4 மணி நேரத்தில் மட்டும் 13.2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் பெங்களூரு வெள்ளக்காடானது. நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. சுரங்க பாதைகளில் 5 அடி உயரத்திற்கு நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு மற்றும் ஹாசன் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இரவில் மிக அதிக மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மேற்பரப்பு காற்று வீசும் என்றும், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஏழு கடலோர மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் முந்தைய எச்சரிக்கையை ரெட் அலர்ட்டாக இந்திய வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பெங்களூரு இன்னும் ஆரஞ்சு அலர்ட் பிரிவின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பெங்களூருவில், இடியுடன் கூடிய மழை வடமேற்கு பெங்களூரு நோக்கி வேகமாக நகர்வதால் நிலைமை சீராகி வருவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story