எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?
Published on

நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com