நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

நாளை மறுதினம் புயல் உருவாகிறது. அதனைத்தொடர்ந்து 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக வலுப்பெறுகிறது.
நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Published on: 

சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

புயல்

இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மறுதினம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்கு பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலுக்கு வருகிற 17-ந்தேதி வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு. அணைகெடங்கில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த புயல் ஏமாற்றாது

தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) புயலாக உருவாகிறது.

இதன் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:-

நாளை மறுதினம் புயல் உருவாகிறது. அதனைத்தொடர்ந்து 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக வலுப்பெறுகிறது. அரேபிய, பசிபிக் உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை ஆகிய காரணிகளால் புயல் ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று பின்னர் மெதுவாக நகரும்.

19-ந்தேதி இரவு முதல் 20-ந்தேதி காலை வரை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அரேபிய உயர் அழுத்தம் காரணமாக இந்த புயல் தமிழகம் நோக்கி அதிலும் குறிப்பாக வட தமிழகப் பகுதிகளில் சென்னை, கடலூரை மையமாக வைத்து கரையை கடக்குமா? புதுச்சேரியை மையமாக வைத்து கரையை கடக்குமா? நெல்லூர் அருகே கரையை கடக்குமா? என்பது இன்று (சனிக்கிழமை) தெரியவரும்.

முரசு, அர்னாப் போல தமிழகத்தை இந்த புயல் ஏமாற்றாது. வடதமிழகத்துக்கு நல்ல மழையை கொடுத்து தான் செல்லும். இதில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் தீவிர மழை இருக்கும். இந்த புயலால் காற்று பாதிப்பு இருக்காது. கடல்சார்ந்த அலைவுகள் சாதகமாக இருப்பதால் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X