அடுத்த மாதம் முதல் மழை தீவிரம் அடையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ மழை பெய்துள்ளது
புதுடெல்லி,
வட இந்தியா முழுவதும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய இமயமலை பிரதேச மாநிலங்களில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. திடீர் மேக வெடிப்பால் அங்குள்ள ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளபெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
வட மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மழை மேலும் தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரகாண்ட், தெற்கு அரியானா, டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இன்னும் தீவிர மழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை மையம், 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு மழை பெய்வது இதுவே முதல் முறை எனக் கூறியுள்ளது.






