தமிழ்நாட்டை நோக்கி அடுத்து வருவது 'முரசு' புயல்: தமிழ் பெயரை சூட்டி இந்தியா கவுரவம்

தமிழ்நாட்டை நோக்கி அடுத்து வரும் புயலுக்கு 'முரசு' என்று தமிழில் பெயர் சூட்டி இந்தியா கவுரவப்படுத்தியுள்ளது.
முரசு' புயல்
Published on: 

புயலுக்கு பெயரிடும் பழக்கம்

புயல்களுக்கு பெயரிடப்படும் பழக்கம் 2004-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி, வெவ்வேறு திசையில் நகரும்போது, அதை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தவே பெயரிடும் பழக்கம் உருவானது. உலக அளவில் புயல்கள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது போன்ற அதிகாரம் 6 வானிலை மையங்களுக்கும், 5 புயல் எச்சரிக்கை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த 6 வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் இருந்து வருகிறது.

13 உறுப்பு நாடுகள் எவை?

இதன் மூலம் ஆசிய - பசிப்பிக் உறுப்பு நாடுகளான வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கு வானிலை முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய வானிலை ஆய்வு மையம், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.

புயலுக்கு பெயர் சூட்ட 9 நிபந்தனைகள்

புயலுக்கான பெயர்களை 13 உறுப்பு நாடுகள் தேர்வு செய்கின்றன. புயலுக்கு பெயர் வைக்க 9 நிபந்தனைகளும் பின்பற்றப்படுகின்றன. அதாவது, புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக்கூடாது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது. மிகவும் கொடூரமானதாக இருக்கக்கூடாது.

சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். புயலின் பெயர் அதிகபட்சம் 8 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், பெயரை பரிந்துரைக்கும் நாடுகள் அதற்கான சரியான உச்சரிப்பையும் தெரிவிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பெயர்களை மீண்டும் வைக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்க முடியும். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தமிழக கடலோரப் பகுகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதேபோல், வரும் 23-ந் தேதி (நாளை மறுநாள்) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதேபோல், தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று காலை நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது. இது இன்று வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகர்ந்து வரக்கூடும். அதன்பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

புயலாக மாறக் கூடும்

இதன் தாக்கத்தால் 23-ந் தேதி (நாளை மறுநாள்) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாகவும் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால், அடுத்து வரும் புயலுக்கு முரசு என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த பெயரை பரிந்துரைத்தது இந்தியா. குறிப்பாக, முரசு என்பது தமிழ் பெயராகும். தொடர்ந்து வரும் புயல்களுக்கு அக்வன் (ஈரான்), கானி (மாலத்தீவு) என்று பெயரிடப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com