தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு... இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது! - வானிலை மையம்

வட தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.
தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு... இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது! - வானிலை மையம்
Published on: 

சென்னை,

தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:-

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவையோட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

பலத்த காற்று

புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளார்.

பாதிப்பு இருக்காது

கடந்த காலத்தில் அர்னாப் புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப் போல, முரசு புயலால் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். நாளை காலை வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வட கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

மிதமான மழை

நவம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 2-வது வாரத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

X