தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.

இன்று (15-12-2024) மற்றும் நாளை ( 16-12-2024) ஆகிய தினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

நாளை மறுநாள் (17-ம் தேதி) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18ம் தேதி அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 19ம் தேதி அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

15-12-2024 முதல் 18-12-2024 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ வேகம் முதல் 45 கிமீ வேகம் வரையிலும், இடையிடையே 55 கிமீ வேகம் வரையிலும் வீசக்கூடும்.

16-12-2024 மற்றும் 17-12-2024 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com