

சென்னை,
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது.
இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 4 மாவட்டங்களில் இன்று மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.