தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளைக்குள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழையும் பெய்யக் கூடும். நாளை (வெள்ளிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தாழ்வு மண்டலம் தமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும் என்பதால், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் முதலாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com