வங்கக்கடலில் உருவானது 'அக்வான்' புயல்

வங்கக்கடலில் உருவான புயலுக்கு அக்வான் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவானது 'அக்வான்' புயல்
Published on: 

சென்னை,

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவி வந்தது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக (Cyclonic Storm) வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

உருவானது புயல்

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு அக்வான் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் 17-11-2026 மாலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலவக்கூடும். இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் மழை

இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடலோர காவல் படை

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக, இந்திய கடலோர காவல் படை, நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதி முழுவதும் கடலில் மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு பாதுகாப்புக்கான உரிய எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும், மீனவர்கள், மாலுமிகள் போன்றோருக்கு அவ்வப்போது உரிய தகவல்களை வழங்கும் வகையில், கடலோரக்காவல் படை கப்பல்கள் மற்றும் அதன் கண்காணிப்பு அமைப்புகள் புயல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

X