எல்-நினோ சூழல்: தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு

அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது.

எல்-நினோ சூழல்:
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதமும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்து உள்ளது.

சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம். வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.

அடிக்கடி மழை பெய்யும்

ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.

அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.

ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.

மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவு

வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com