தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்

Photo Credit: PTI
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன் தினம், தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. வாட்டி வதைத்த வெயிலுக்கு நடுவே இந்த திடீர் மழை மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியதாவது:-
பூமத்திய ரேகையை ஒட்டிய, மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு முதல், தென்மேற்கு வங்கக்கடல் வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 -ஆம் தேதி வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம், காலையில் லேசான பனி மூட்டம் காணப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.