வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேலும், இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது, வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காவிரிப் படுகை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






