

சென்னை,
தமிழத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. பலவேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மேற்கு மத்திய பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மராட்டியம், மராத்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
மேலும், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 23-ந்தேதி வரையில் வட உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.