

சென்னை,
தென் இந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13-ந்தேதி தென் இந்தியப் பெருங்கடலில், இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ. தொலைவில் உருவான உயர் ஆற்றல் கொண்ட நீண்ட அலைகள், தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த அலைகளின் கால அளவு சுமார் 21 வினாடிகள் என்பதால், அதிக சக்தியுடன் கரையைத் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலைகள் இன்று (19-ந்தேதி) அதிகாலை முதல் இந்தியாவின் தென் முனையை தாக்கத் தொடங்கி, மாலை நேரத்தில் உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை (20-ந்தேதி) மாலை 5.30 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது உயர் அலைகளுடன் கடல் ஏற்றமும் சேர்வதால், தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் நீர் திடீரென உட்புகுந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இந்த கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 1,500 பைபர் படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை குளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.