

சென்னை,
கத்திரி வெயில் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பகல் நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதற்கே கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதலே மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம்கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், விருகம்பாக்கம், கோயம்பேடு, பல்லாவரம், குரோம்பேட்டை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் பலத்த தரைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
மெரினா கடற்கரையில் புழுதிக் காற்று வீசியதால், நடைபயிற்சி செல்பவர்கள் சிரமமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடற்கரை மணல் பரப்பில் இருந்த பொதுமக்களை வெளியேறும்படி காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், கடற்கரைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவையே இன்றைய திடீரென மேகமூட்டத்திற்கு முக்கியக் காரணம்.
வழக்கமாக வீசும் வறண்ட காற்றுக்கு பதிலாக, வங்கக்கடலில் இருந்து குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காற்று சென்னையை நோக்கி வீசத் தொடங்கியது.
கடலிலிருந்து வந்த இந்த அதிகப்படியான ஈரப்பதம் நிலப்பகுதிக்குள் நுழைந்ததால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கருமேகங்கள் உருவாகின. இதனால்தான் கடந்த சில நாட்களை விட வெயிலின் தாக்கம் குறைந்து, பகல் நேர வெப்பநிலை சற்று மிதமாக உள்ளது. இதனால் சென்னைவாசிகள் இன்று கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்தோமடா சாமி என மகிழ்ச்சி அடைந்தனர்.