டுவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்

டுவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டுவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்
Published on

சியாட்டில்,

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) கொடுத்து வாங்கிய உலகப்பணக்காரர் எலான் மஸ்க் டுவிட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்த வாரத்திலேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் இது, அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 16 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் 1 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே வேலையை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசானின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் பிரிவு, சில சில்லறை வர்த்தக பிரிவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்று கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் பல மாத ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com