ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மொசூல் நகரில் 100,000 பேரை மனித கேடயமாக வைத்து உள்ளது

மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனித கேடயமாக 100,000 பேரை பிடித்து வைத்து உள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மொசூல் நகரில் 100,000 பேரை மனித கேடயமாக வைத்து உள்ளது
Published on

ஜெனீவா,

ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றினர். மொசூல் நகரில் தங்களுடைய கொடூரமான ஆட்சியை தொடங்கினர்.

இதனையடுத்து வெளிநாட்டு படைகள் உதவியுடன் ஈராக்கிய படை மொசூல் நகரை மீட்க போராடி வருகிறது. இருதரப்பு இடையேயும் போர் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தப்பியவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பழமையான மொசூல் நகரில் ஒரு லட்சம் மக்களை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மனித கேடயமாக பிடித்து வைத்து உள்ளது என ஐ.நா. தெரிவித்து உள்ளது. சண்டை நடைபெறும் மொசூல் நகருக்கு வெளிப்பகுதியில் பொதுமக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்து வைத்து உள்ளனர் என ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

அவர்களை தங்கள் வசம் உள்ள மொசூல் நகருக்குள் செல்லுமாறு துன்புறுத்தி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈராக்கிற்கான ஐ.நா. அகதிகள் அமைப்பின் பிரதிநிதி ஜிட்டோ பேசுகையில், பழமையான நகரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மனித கேடயமாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கலாம், என குறிப்பிட்டு உள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் மனித கேடயமாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதியில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. பொதுமக்கள் மிகவு மோசமான சூழ்நிலையில் பதற்றத்துடன் உள்ளனர். அவர்களை சுற்றி அனைத்து பகுதியிலும் சண்டைதான் நடக்கிறது. ஜிகாதிகள் தங்கள் வசமிருக்கும் பகுதியில் இருந்து வெளியேற முயற்சி செய்பவர்களை கொன்று வருகிறார்கள். அப்படியிருந்தும் சிலர் உயிர்தப்பி வெளியே வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போரினால் மொசூல் நகரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறிஉள்ள ஐ.நா.சபை முகாம்களில் 5 லட்சம் மக்களுக்கு உதவி செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com