

பெய்ஜிங்,
சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தும் தனது அசாதாரண உணவுமுறை மற்றும் தினசரி வாழ்க்கை வழக்கத்தால் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். நவீன மருத்துவ உலகம் ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்லும் குளிர்பானங்களை, இவர் தனது 100 வயதைக் கடந்தும் தினமும் விரும்பி அருந்தி வருகிறார்.
சீனாவின் ஜியாங்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் லூ ஷிஸெங் (வயது 101). இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கே விழித்துவிடுகிறார். ஆனால், உடனடியாக படுக்கையை விட்டு எழாமல், சுமார் 2 மணி நேரம் கட்டிலிலேயே படுத்தபடி தனது உடலை நீட்டி எளிய உடற்பயிற்சிகளைச் செய்கிறார். பின்னர் காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து தனது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்.
கிராமப்புறத்தில் வசிக்கும் இவர், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் சந்தைக்கு சென்று தனக்குத் தேவையான புதிய காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு வரை தனது சொந்த டிரைசைக்கிளை ஓட்டிச் சென்றவர், இப்போது ரிக்சா மூலம் சந்தைக்குச் சென்று வருகிறார்.
இவரது உணவுப் பழக்கம் ஊட்டச்சத்து நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் கோகோ கோலா மற்றும் ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களை அலாதியாக விரும்புகிறார். குறிப்பாக, ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட ஸ்பிரைட் பானத்தில், சில துளிகள் ஒயின் அல்லது மதுவைக் கலந்து குடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்.
சாப்பாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேளைக்கு அரை கிண்ணம் சாதம் மட்டுமே சாப்பிடும் இவர், தட்டு நிறைய நண்டுகள், மீன், இறால் போன்ற கடல் உணவுகளையும், பன்றி இறைச்சியையும் விரும்பி உண்கிறார். உணவுக்குப் பிறகு தர்பூசணி மற்றும் ஆரஞ்சு போன்ற இனிப்புச் சுவை மிகுந்த பழங்களைச் சாப்பிடுகிறார்.
இவரது நீண்ட ஆயுளுக்கு மற்றொரு முக்கிய காரணியாக பார்க்கப்படுவது இவரது சீரான தூக்க முறை ஆகும். மதிய வேளையில் தவறாமல் ஒரு குட்டித் தூக்கம் போடும் லூ, மாலை 5 மணிக்கே இரவு உணவை முடித்து விடுகிறார். பின்னர், இரவு 8 மணிக்கெல்லாம் ஆழமான தூக்கத்திற்கு சென்றுவிடுகிறார்.
அளவான சாப்பாடு, சுறுசுறுப்பான இயக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்வியல் முறையே, இந்த வயதிலும் அவரை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.